Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

விலங்கிடப்பட்ட மானுடம்

சுல்பிகா

தேசிய கலை இலக்கியப் பேரவை

-----------------------------------------------------------

விலங்கிடப்பட்ட மானுடம்

சுல்பிகா

முதல் பதிப்பு- ஏப்ரல் 1995

அச்சு- சூர்யா அச்சகம்

வெளியீடு- தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 6/1, தாயார் சாகிப் 2ஆவது சந்து, சென்னை- 600 002.

ரூ. 8

------------------------------------------------------------

பதிப்புரை

எமது இயக்கத்தின் நூல் வெளியீட்டு வரிசையில் மற்றுமொரு கவிதைத் தொகுதியினை வெளிக்கொணர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நிச்சயமாக இக்கவிதைத் தொகுதி பலரின் கவனத்தை ஈர்க்கும் என நம்புகிறோம். ஒரு நூலுக்குத் தேவையான மிகப் பெரிய உதவி அதைப் பற்றிப் பேசுவது, விமர்சிப்பது, கருத்துப் பரிமாறிக் கொள்வது.

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். எங்கள் வெளியீட்டு முயற்சிக்கு உங்களது ஆதரவை நாடும்,

தேசிய கலை இலக்கியப் பேரவை

---------------------------------------------------------------

உள்ளே...

அறிமுகம்

விலங்கிடப்பட்ட மானுடம்

பெண்

காணாமல் போன நினைவுகள்

கவிதை

கறை படிந்த அதிகாலை

விரைந்து வெளியில் வா

காணாமல் போகும் பெண்களும் மண்ணின் மாந்தர்களும்

இதயராகம்

இது ஓர் மென்னுணர்வு

அன்புள்ள அன்னைக்கு

ஓர் புற்று நோயாளியும் நானும்

இருப்பின் மறுப்பு

சாதாரண மனிதன்

போர் இரவுகளின் சாட்சிகள்

எனக்கோர் இடம் வேண்டும்

திரைகளின் பின்னால்

பாவம் மானுடன்

இன்பம் நிலைக்க இளமை வேண்டும்

து(ர்)ப்பாக்கி(ய) மனிதன்

உழைப்பு

---------------------------------------------------

அறிமுகம்

எண்பதுகளில் ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெண்கவிஞர்கள் முக்கிய இடம் பெறுகின்றார்கள். முன் எப்போதும் இல்லாத வகையில் இக்காலப் பகுதியிலேயே இங்கு இளம் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் இலக்கியத் துறையில், குறிப்பாகக் கவிதைத் துறையில் பிரவேசித்தனர். இவர்களில் பெரும்பாலோர் பல்கலைக்கழகங்களில் பயின்றவர்கள்; பெண்கள் தொடர்பான சமூக இயக்கங்களுடனும் நிறுவனங்களுடனும் தொடர்புடையவர்கள்; வெவ்வேறு அளவில் பெண்நிலைவாதச் சிந்தனைகளின் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள். எண்பதுகளில் ஈழத்தில் உருவாகிய ஒரு புதிய சமூக, அரசியல், கலாசாரப் பிரக்ஞையின் ஒரு முக்கிய கூறாக இவர்களது இலக்கியப் படைப்புக்கள் அமைகின்றன. இவர்களது கவிதைகளில் இன்றையச் சூழலில் பெண்களின் இருத்தல் பற்றிய பிரச்சனைகளுமே பிரதான இடம் பெறுகின்றன. இவ்வகையில் இக்காலப் பகுதியில் எழுதத் தொடங்கிய பதினொரு பெண்கவிஞர்களின் 24 கவிதைகளைக் கொண்ட கவிதைத் தொகுதி ஒன்று 'சொல்லாத சேதகள்' என்ற தலைப்பில் எண்பதுகளின் பிற்பகுதியில் (1986) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. இன்றைய ஈழத்துப் பெண்களின் கலாசார விழிப்புணர்வையும் சமகாலப் பிரச்சனைகள் பற்றிய அவர்களது பிரக்ஞையையும் வெளிப்படுத்தும் இத்தொகுப்பு அதன் முக்கியத்துவம் கருதி உடனடியாக தமிழகத்தில் மறுபிரசுரம் பெற்றது.

'விலங்கிடப்பட்ட மானுடம்' என்னும் இக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் சுல்பிகா சமூகப் பிரக்ஞை கொண்ட ஈழத்துப் பெண்கவிஞர் வரிசையில் எண்பதுகளின் பிற்பகுதியில் வந்து சேர்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான இவர், சுமார் பத்து ஆண்டு காலம் விஞ்ஞான ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். கொழும்புப் பலகலைக் கழகத்தின் கல்வியியல் டிப்ளோமாப் பட்டமும் பெற்ற இவர் தற்போது இலங்கைத் தேசிய கல்வி நிறுவகத்தில் செயல்திட்ட அதிகாரியாகவும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அதிதி விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். பெண்களின் முன்னேற்றம், விஞ்ஞானக் கல்வி, கல்விச் சிந்தனைகள் என்பண தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளும் எழுதிவரும் இவர் கவிஞராக மட்டுமன்றி ஓர் இளம் ஆய்வறிவாளராகவும் முகிழ்த்துள்ளார். விலங்கிடப்பட்ட மானுடம் என்ற இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் ஈழத்துப் பெண்கவிஞர் வரிசையில் சுல்பிகாவுக்கும் ஓர் முக்கிய இடம் உண்டு என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இத்தொகுப்பில் 20 கவிதைகள் உள்ளன. 1983இல் எழுதப்பட்ட பெண் என்ற கவிதையைத் தவிர பிற கவிதைகள் அனைத்தும் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் எழுதப்பட்டவை. சுல்பிகாவின் எல்லாக் கவிதைகளுமே சமகால வாழ்வின் பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவரது சமூகப் பிரக்ஞையின் வெளிப்பாடாக அமைபவை. பெண்மையின் உயிர்ப்பை மட்டுமன்றி, முழு மானுடத்தின் உயிர்ப்பையும் அவர் அவாவி நிற்கின்றார். அவ்வகையில் மனிதத்துவத்தின் உயிர்ப்பே இவரது கவிதைப் பொருளின் சாரம் எனலாம். இன்றைய வாழ்நிலை அழுத்தத்தில் விலங்கிடப்பட்டுக் கிடக்கும் மானுடம் சகல தளைகளில் இருந்தும் அடக்கு முறைகளில் இருந்தும் விடுபட்டு உயிர்த்தெழு வேண்டும் என்பதே இவரது கவிதைகளின் அடிக்குரலாக ஒலிக்கின்றது.

இவரது பெரும்பாலான கவிதைகள் இன்றைய ஈழத்தின் அன்றாட வாழ்க்கை அனுபவத்தில் இருந்து பிறந்தவை. கடந்த பத்தாண்டுகளில் துப்பாக்கிகளின் எழுச்சியும் மனிதத்துவத்தின் அழிவும் எமது அன்றாட அனுபவத்தின் பிரதான பகுதியாகி விட்டது. சமகால ஈழத்துத் தமிழ்க் கவிதையில் இந்த அனுபவம் பிரதான இடம் பெற்றிருப்பது இயல்பானதுதான். கறைபடிந்த அதிகாலை, ஒரு புற்று நோயாளியும் நானும், இருப்பின் மறுப்பு, போர் இரவுகளின் சாட்சிகள் முதலிய கவிதைகளில் சுல்பிகா தன் நோக்கில் இந்த அனுபவத்தை பதிவுசெய்திருக்கிறார். துப்பாக்கி மனிதன் மனித நேயத்துக்கு எப்போது அடிமையாகப் போகிறான் என்பதே இவரது ஆதங்கம். கடந்த பத்தாண்டு கால அனுபவத்தில் ஈழத்துக் கவிதை பெரும்பாலும் துப்பாக்கியின் எதிரியாகி விட்டது. அது இப்போது மனித நேயத்தைப் பற்றியே பாடவேண்டியுள்ளது. இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் மனிதநேயத்தின் குரலாகவும் உள்ளன.

மனித சமூகம் நெடுங்காலமாக ஆணாதிக்க சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது. எல்லா நிலைகளிலும் ஆணாதிக்கக் கருத்து நிலையே சமூகத்தில் வேரூன்றியுள்ளது. 'தாயி சிறந்ததொரு கோயிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பது அங்கீகரிக்கப்பட்ட கருத்து நிலையின் வெளிப்பாடாகும். தாய் (பெண்) புனிதமானவ்ள் பூசிக்கத் தக்கவள் எனினும் தந்தையே (ஆண்) அதிகாரம் உள்ளவன் என்பது இதன் பொருள். இதனை ஆண் ஆதிக்கக் கருத்து நிலையின் சாரம் எனலாம். இக்கருத்து நிலை நெடுங்காலமாகக் கேள்விக்கு இடமாக்கப் படவில்லை. ஆனால் நவீஅன் சமூகத்தில் பெண்களும் கல்வி அறிவு பெற்று சமூக வாழ்க்கையில் முக்கிய இடம் பெறத் தொடங்கியதும் பெண்களின் இருத்தலுக்கும் இந்தக் கருத்து நிலைக்கும் இடையே முரண்பாடு தோன்றத் தொடங்கியது. இந்த முரண்பாட்டின் அடிப்படைய்ல் பெண்களின் தனித்துவம், பெண்விடுதலை பற்றிய உணர்வும் பெண்நிலைவாதச் சிந்தனைகளும் தோன்றின. பெண் எவ்வகையிலும் ஆணுக்குத் தாழ்ந்தவள் அல்ல; அவனுக்கு அடிமைப்பட்டவள் அல்ல; சொந்த விருப்பு வெறுப்புகள் உள்ள, சுயமான வளர்ச்சிக்கு ய்ரிமை உள்ள ஒரு சுதந்திர உயிரி என்பது இச்சிந்தனைகளின் சாராம்சம் எனலாம். 'ஆணுக்கு இன்பம் தருபவளே பெண்' என்ற பெண்பற்றிய பாலியல் படிமத்தை இந்த நவீன சிந்தனை நிராகரிக்கின்றது; எல்லாத் துறைகளிலும் பெண்ணும் ஆணுக்குச் சமாந்தரமாக சுயேச்சையாக வளர்ச்சியடைவதை வேண்டி நிற்கிறது. இக்கருத்து நிலையின் வெளிப்பாடுகளை சுல்பிகாவின் பல கவிதைகளில் காணலாம். 'பெண் ஒரு பாலியல் பிண்டம் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தின் உயிர்ப்பே அவளுள் உறைந்து கிடக்கின்றது' என 'திரைகளின் பின்னால்' என்ற கவிதை உரத்துக் கூறுகிறது.

இறந்தவர் அல்லர் நாம்

இதயம் துடிக்கும் ஏழைப் பெண்கள்

மண்ணின் குழந்தைகள்

மானிடப் பெண்கள் நாம்

இனியும் சகியோம்

இருளின் ஆட்சியை

எதற்கும் அஞ்சோம் துன்பம் ஏற்றிடோம்

துயர்மிகக் கொள்ளோம்

வென்று இவ்வுலகில் நிலைத்திட வந்தோம்

இன்று பிறந்தோம்

இன்று பிறந்தோம்

வென்று வாழ்ந்திட

இன்று பிறந்தோம்

சுல்பிகாவின் இவ்வரிகள் பெண்களின் எழுச்சிக் குரலாகவே ஒலிக்கின்றன.

இவ்வுலகில் தீயனவெல்லாம்

செயலிழக்கச் செய்வேன்

தோல்வி என்னைத்

தோற்கடிக்க முடியாது

தேவைகள் எதுவரினும்

தேறிநான் செல்வேன்

இவ்வாழ்வை வெல்வேன்

என்ற கவிஞரின் பிரகடனம் பெண்குலத்தின் பிரகடனமாக மட்டுமன்றி முழு மனித குலத்தின் பிரகடனமாகவும் அமைகின்றது. இந்த நம்பிக்கைக் குரல் இருள்மண்டிய இன்றையச் சூழலில் நமக்கு ஆறுதல் தரும் குரலாகும்.

இது கவிஞரின் முதல் தொகுப்பு. கவித்துவ முதிர்ச்சி அவருக்கு இன்னும் கைவர வேண்டும். வார்த்தையில் கூர்மையும், கவித்துவச் செழுமையும் இன்னும் அகன்ற உலகப் பார்வையும் கொண்டு கவிதை உலகில் நிலைபெற கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்.

எம். எ. நுஃமான்

பேராதனைப் பல்கலைக்கழகம்,

பேராதனை, இலங்கை.

18.2.94

-----------------------------------------------------------

விலங்கிடப்பட்ட மானுடம்

எழுத்துக்களும் எண்களும்

ஆளும் காலமிது.

மனிதனின் ஆக்கங்களே

அவனை ஆள்கின்றன.

வாய் பேசாதிருக்கும்படி,

தன்னுணர்வுகளை மறந்து விடும்படி,

அவன் கேட்கப்படுகிறான்.

மானுடம் அவற்றின்முன்

தாழ் பணிந்துள்ளது;

தன்னுயிரைத்தங்க வைப்பதற்காக.

பாவம், மானிடன்

அவனது ஆக்கங்களே

அவனைச் சிறையிட்டுள்ளன.

விலங்கிட்டு அவனை

மௌனியாக்கியுள்ளன.

கைகளும் கண்களும்

ஆட்சி செய்யும் காலமிது.

யார் சொன்னார்கள்

வருங்காலம் கைகளினதும்

மூளையினதும் ஆட்சிக்குட்படும் என்று?

மானுடமே

விழித்தெழு.

உரங் கொண்டு,

உயிர்த்தெழு,

உன்மீது மாட்டப்பட்டுள்ள

விலங்குகள்

உன்னால் மாத்திரமே உடைக்கப்படக்கூடியன.

உனது ஓர் ஆயிரம் கரங்கள்,

உனது ஆக்கங்களின் உயிர்த்தலையே

நிரோதிக்க வல்லன.

1989

------------------------------------------------------------

பெண்

செற்றில் செழித்த,

செங்கமல அரும்புபோல

மென்மஞ்சள் நிறமுலைகள்,

வெண்ணய்யில் செதுக்கிய

உடல் வண்ணம்,

மென்மையான

பெண்மையின் அங்கங்கள்.

இவை மட்டுமா கொண்டு

இப்பூதம் உருவாகியுள்ளது?

செறிந்த பொருள்சேர்

சிந்தனைத் திறமையும்

அரியதிறன் மிகு

கொள்கையும்,

நெஞ்சுரமும்,

எம்மில் புதைந்துள்ளன.

பாலியல் உணர்வு

மட்டுமா எம்மில் கலந்துள்ளது?

பார்த்தல், கேட்டல்

ருசித்தல் மணத்தல்

உணர்தல் இவற்றுடன்

பகுத்தறிதல் என்பனவும்

எமக்கு உண்டு.

கண்களும், மூக்கும்

செவிகளும், நாவும்

உணர்மிகக் கொண்ட தோல்முடியும்

எம்மைக் காவலிட்டுள்ளன.

இவற்றினுள்ளே,

இப்பிரபஞ்சத்தின் உயிர்ப்பே

உறைந்து கிடக்கின்றது.

1983

------------------------------------------------------------

காணாமல் போன நினைவுகள்

நினத்து வெகு நாட்களாகி விட்டது பீலுள்ளது.

ஏனெனில், எனக்குள் இருக்கும் நீ

என் நினைவுச் சுவடுகளையே

தின்று விட்டு எனக்குள்ளேயே

அடங்கிக் கொண்டாய்.

என்னை அன்று சந்தித்த போது,

எமது இயக்கங்கள் பற்றி,

எமது எதிர்காலம் பற்றி,

ஏதேதோ பேசிக்கொண்டதாய்

ஓர்மின்னல் நினைவு.

கூட்டுமொத்தமாய்ப் பார்த்தால்

இருப்பது ஒரே ஒரு இயக்கம்

என்பது தெரிகிறது

அதுதான் நம் இருப்புப் பற்றியது.

நாளை மீண்டும் சந்திக்க நேர்ந்தால்

அவை பற்றி கதைக்கலாம்.

நீயே நினைவாகி விட்டதால்

நினைவே நீயாகி விட்டதால்

நினைத்து வெகு நாட்களாகி விட்டது போலுள்ளது.

1990

------------------------------------------------------------

கவிதை

கொடுமைச் சுமை அழுத்தும் போது

மனிதன் ஊமையாகின்றான்.

இன்பக் களிப்பு அவனைச் சிரிக்கச் செய்கின்றது.

கோபாவேசம் அவனைப் பேசச் செய்கிறது.

ஊமைக் கனவு அவனை அழச் செய்கிறது.

துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளவும்

உள்ளக் குமுறல்களை பதிவு செய்யவும்

உணர்வுகளையும், கருத்துக்களையும்

பலநூறு இதயங்களினூடு ஏந்திச் செல்லவும்

இந்தக் கவிதை எமக்குதவாதா?

காமத்தை, கார்மேகத்தை, வானத்தை,

நல்லமயில் வண்ணத்தை

வார்த்தை ஜாலங்களால் பாட மட்டுந்தான் உதவுமாயின்

அது எமக்கு வேண்டாம்.

ஏனெனில் அந்நிலைகளை, அதன் அழகுத் தோற்றத்தை

நாம் கண்டு கொள்ளவேயில்லை.

உணர்வுகளால் ஸ்பரிசித்து மனதால் இதமடையவேயில்லை.

பசி வயிற்றைப் பிடுங்கும் போதும்,

கொடுமை கழுத்தை நெரிக்கும் போதும்

எவையெல்லாம் எமக்கு வேண்டாதனவோ

அவையெல்லாம் எம்மைத் திரையிடும் போதும்,

எமக்குத் தேவையானவைகளை

நாம் அடைய முடியாதவாறு

தடுக்கப்படும் போதும்,

இதனைக் கண்டுகொள்ள எமக்கு எப்புலனுண்டு?

எம்மைப் பாட இயலாததாயின்

அந்தக் கவிதை எமக்கு வேண்டாம்.

கவிதை, எம்மைப் பாடவேண்டும்.

1991

------------------------------------------------------------

கறை படிந்த அதிகாலை

பகலிலிருந்து இரவு பிரிக்கப்பட்டது

பலாத்காரமாக.

பகல் பொழுதுகளை அறவே இல்லாது

அழித்துக் கொன்றது அந்த அதிகாலை.

யாரும் யாரிடமும் சொல்லிக் கொள்ளாது

விடை பெற்றுக் கொண்டனர்.

உடலிலிருந்து உயிர்ப்பு பறித்தெடுக்கப்பட்டது

குழந்தைகள் தாயிடமிருந்தும்

சகோதரன் சகோதரியிடமிருந்தும்

மனைவி கணவனிடமிருந்தும்

கணவன் மனைவியிடமிருந்தும்

கணப்பொழுதில் பிரிக்கப்பட்டனர்.

தீயின் கரங்கள் குடிமனைகளை சாம்பலாக்கிற்று.

எத்தனை தடவை, எத்தனை இடங்களில் நடந்தது.

பாதிநித்திரையில் அப்பாதகர்கள் 'உன்னை'க் கொன்றனர்.

பட்டினி, வறுமை, உழைப்பு, களைப்பு

இவைதவிர எதனையும் அறிய மாட்டாய்.

என்ன குற்றம் செய்தாய்?

பொல்லாப்பு, வன்முறை என்ற சொல்லைக்கூட நீ அறிய மாட்டாய்

இந்த உலகில் பிறந்து உன் இருப்பை அறிவித்தாய் அவ்வளவுதான்.

நிலத்தில் காலூன்றி நிற்கக்கூட உனக்கு இன்னும் உரம் வரவில்லை

மனித உயர் விழுமியங்களை மதிக்காத இம்மாபாதகர்கள்

உன்னைக் கொன்றனர்.

பாதி இரவில், நித்திரையின் மடியில் நீ உலகை விட்டுப் பிரிந்தாய்.

உன் இருப்பு உனக்கு மறுக்கப்பட்டது ஏன்?

மிருகங்களின் மதத்தின் போது மிதியுண்ட புற்களைப் போல

நீ உயிர் நீக்க நேர்ந்தது.

ஆனால் இது தற்செயலானதல்ல,

தீதேதும் அறியாத நீ இதற்கிரையானாய்

யாது நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது?

என உரைக்காது நாம் இருந்தால்

வரலாற்றுப் பாவிகளாய் நாம் இறக்க நேரும்.

இன்று நீ வரலாறானாய்,

இந்த வரலாறு தொடராது காப்பது உங்கள்

கடன் என எமக்குணர்த்தி மறைந்தாய்.

நெஞ்சில் கொட்டும் குருதியை உன் காலகளில் இட்டு

அஞ்சலி செய்கிறோம்

வீரசுவர்க்கம் உனது புகலிடமாகட்டும்.

எமது சிந்தை இனிப்பரந்து செல்லட்டும்.

இந்தப் புயலின் திசையை எது என அறியட்டும்.

மனித நேயத்தையும், மனிதா பிமானத்தையும்

குழிதோண்டிப் புதைத்துவிட்டு

நாங்களே உலகில் உயர்ந்தோர்

நமதே உலகம் என இறுமாப்படைந்தோர்

வரலாற்றில் என்ன ஆனார்கள்?

மனித இருப்பையும், நேயத்தையும்

அவன் உரிமையையும், அவனுக்குரிய கண்ணியத்தையும்

மதிக்காத அவர்கள் மிலேச்சத்தனம்

துயரக்கதைகளையே அவர்களுக்குரியதாக்கிற்று.

1992

------------------------------------------------------------

விரைந்து வெளியில் வா

விரைந்து வெளியில் வா

சுகந்தமான இளம்தென்றல்

வெளியில் வீசுகின்றது.

சிறிது உலாவிட்டு வரலாம்

மெல்ல வெளியில் வா.

தேனும் தீன்கனியும் தான்

மனிதனுக்கு ஊன் என்றில்லை.

மனதுக்கு இனிய,

நிகழ்வுகள் கூட

உணவாக வேண்டும்.

வேண்டுமானால் சாலைஓரம்

நடந்து செல்லலாம்.

உடல் குளிர்ந்து ஒடுங்கிப்போயுள்ளது.

சூடாக ஏதாயிலும் அருந்த

அடுத்துள்ள தேநீர்கடைக்கும் செல்லலாம்.

மாலைக் கதிர்கள்,

கடலில் விழுந்து

நம்மை மகிழ்வில் ஆழ்த்துதல் கூடும்,

பாலை மணலைச் சூடாக்கி

கானல் நீரைக் கனவு காண்பது எமக்கு வேண்டாம்.

வேளைக்கு முன் எழுந்து

விரைந்து வெளியில் வா,

சாலை ஓரம் நடந்து செல்ல,

சோலை தன்னில் கழித்து இருக்க,

தேநீர் கடையில் தேநீர் அருந்த

அனைத்தும் அனைத்தும் நாம் வேண்டுவதை

நாம் செய்ய

விரைந்து வெளியில் வா

------------------------------------------------------------

காணாமல் போகும் பெண்களும் மண்ணின் மாந்தர்களும்

பெண்மையும், மென்மையும்

அவர்கள் இலட்சணங்கள்

தாய்மை அவர்களது

அழகிய ஆபரணம்.

அவர்கள் பூவிலும் மெல்லிய

பூசிக்கத்தக்கவர்கள்

அவர்கள் பெண்கள் அல்ல

தெய்வப் பிறவாக்ள்.

வானத்துள் உறையா

இவ்வையத்து தெய்வங்கள்.

மண்ணின் மைந்தர்களுக்கு

அல்லவா மனித உரிமைகள்.

தெய்வப் பிறவிகட்கு எதற்கவை?

யாரிந்த மண்ணின் மைந்தர்கள்?

நோபல் பரிசு கிடைக்குமெனின்

நானே உலகில்

நாணம் பயிர்ப்பு

அச்சம், மடம் கொண்ட

ஆண் மகனாவேன் என்று

பணத்தாசை பிடித்தலையும்

உளத்தால் ஊனமுற்றோரா?

மனத்தால் வறுமையுற்ற

இம்மானிடர்கள்

தம்மைத் தாமே- இம்

மண்ணின் மன்னர்களாய்

முடி சூட்டிக் கொண்டவர்கள்.

'பலவீனர்கள்' எனக் கூறி

அவர்களைக் கொண்டே

பலம் பெறும் இவர்களா

இம் மண்ணின் மைந்தர்கள்?

பெண்மையும் மென்மையும்

தாய்மையும் ஓர் புறம்

தீராத ஊழிக் கடனும்

தேவையாயின் திரவியம் தேடலும்

மறுபுறம்

பெண்களை மறைக்கும் புதைகுழிகளாயின.

நாமிந்த உலகிற்கு

நரகத்துளலவா வந்து பிறந்துள்ளோம்?

புதை குழிகளில்

சாகாத பிணங்களாய்

சதா வாழவா வந்தோம்.

இல்லவேயில்லை

புதைகுழியிலிருந்து

புதிதாய்ப் பிறப்போம்

புதுமைகள் செய்வோம்.

பலவீனர்களல்ல,

பலத்தின் அடிப்படையே நாம்.

நாமே இம் மண்ணின் மாந்தர்கள்

என்பதைப் பிரகடனம் செய்வோம்.

1992

------------------------------------------------------------

இதயராகம்

நீலவானில் நிலா

வைகறைப் பொழுதில் எழுந்திருக்கின்றது.

மேகத்தின் மெல்லிய திரை அதனைச் சுற்றி

மோகன வட்டமிட்டுள்ளது.

அதன் மருங்குகளில்

வானவில்லின் வர்ணங்கள் ஒளிர்கின்றன.

அமைதி எங்கும் ஆட்கொண்டுள்ளது

மெல்ல செவிமடுத்துக் கேள்,

எங்கிருந்தோ பாடும் அவளது

இதய ராகம் காற்றோடு கலந்து வருகின்றது

ஆக்காண்டிப் பறவை அவள் குரலை

எங்கும் எடுத்துச் செல்கின்றது

இளம் தென்றல் அவள் மென்மணத்தை

எங்கும் தூவிச் செல்கின்றது

அவளது வரவை உன்னால்

உணர முடிகின்றதா?

இதோ அழகிய நட்சத்திரங்கள்

அவள் கண்ணிலிருந்து ஒளிபெற்று

மின்னுகின்றன.

கடலும் தொடுவானமும் அவள் வண்ணம்

கொண்டு மிளிர்கின்றன.

அதே ஒலி...

அதே ராகம்...

மீண்டும் மீண்டும் தொடர்கின்றது.

நன்றாகச் செவிமடுத்துக் கேள்-

அவள் இதயத்தின் ஒலிக்கூடாக

உன் பெயர் உச்சரிக்கப்படுகின்றது.

உதடுகளால் அவள் அதை உச்சரிப்பதில்லை.

காற்று அவள் உதடுகளை மூடச்செய்துள்ளது

ஆயினும்,

உதடுகளுக்கு இல்லாத சக்தியை

அவள் தன் இதயத்திற்குக் கொடுத்திருக்கிறாள்.

அதனால் தானோ என்னவோ,

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும்

அவளது ராகம் ஒலிக்கின்றது.

முடிந்தால் அதற்கப்பாலும் சென்று

செவிமடுத்துக் கேள்.

காற்று;

அதனால் அவளது

இதயத்தினுள் புக முடியாது.

அது; அவளது ராகத்தைத்

தடுக்க முடியாது தவிக்கட்டும்.

அவள் கண்களில் மினுங்கும்

சோகக் கதிர்களை

உன் மனத்திரை பதிவு செய்யக்கூடும்.

நீ பெற்றுக் கொண்ட

துலங்கலைக் கூட

அவள் கண்கள்

மீளவும் பெறவும் கூடும்.

எனினும்,

அவளது இதயராகம்

உண்மைக் கவிஞனின்

பேனா முனையினால் கூட

இதுவரை எழுதப்படாதவை

அவளைச் சுற்றி

எத்தனை வேலிகள்.

இவைகளைத் தாண்டி,

உன் மனத்திரையை அடையும்படி

அவ்ள் இசத்துக்க் கொண்டேயிருக்கிறாள்.

விடியற் காலையில் அவள் ராகத்தை

உன் செவிகள் கேட்கக்கூடும்.

யாருமே அறியாதபடி

அவள் இதயராகம் மீட்டப்படுகின்றது.

இப்போது உன்னால் மிகத்

தெளிவாகக் கேட்க முடிகிறதா?

உடன் பதிவு செய்து கொள்,

இந்தப் பொல்லாத காற்று,

அதனைக் கூட அள்ளிச் செல்லக்கூடும்.

------------------------------------------------------------

இது ஓர் மென்னுணர்வு

அது எனது சிருஷ்டி

கண்ணாடி இழை கொண்டு

பின்னப்பட்ட அழகிய 'sponge'இலும்

மென்மையானது.

தாயின் கருவறையில்

வளரும் சிசுவிலும் தூய்மையானது.

இளங்காலைக் கரிர்பட்டு

நகைக்கும் தளிரிலும்

மகிழ்ச்சியானது.

இயற்கையையே

'இல்லை' என்று விடும்போல்

அற்புதம் மிக்கது.

அது என் உடலின்

உள்ளத்தின்

உயிர்ப்போட்டம்.

அதுவே எனது பிரபஞ்சம்

முழுவதையும் ஆட்கொண்டுள்ளது.

எனினும் அது மிக மென்மையானது

மென் இளந் தென்றல் கூட

பொல்லாரின் இன்சொற்கள் கூட

அதனை அழித்துவிடக் கூடும்

அதன் அழகை

அற்புதத்தை

இனிமையை

மகிழ்ச்சியை

தூய்மையை

மென்மையை இழக்கச் செய்துவிடக் கூடும்.

என்றும் நான் காப்பேன்

கொடிய புயலிலும்

நான் அதைக் காப்பேன்

என் முளை கலங்களிலும் பார்க்க

பெறுமதி மிக்க அதை

என் உணர்வுகளை இவ்வுடன்

இழக்கும் வரை காப்பேன்

அது என் சிருஷ்டி

முடிந்தால்

அதற்கப்பாலும்

அதனை என்னால் காக்கவும் முடியும்.

------------------------------------------------------------

அன்புள்ள அன்னைக்கு

"மகளே,

இப்பார்

திசையெங்கும்

பரந்து கிடக்கின்றது.

மெல்ல எழு...

நில்... நேராய் நட..."

நீயே பாதையைத் திறந்து விட்டாய்.

நீ காட்டிய பாதை வழியே நான்

வெகுதூரம் சென்றேன்.

உன் கற்பனைக்கும் எட்டாத

தெருக்களைக் கூட

நான் கடந்து சென்றேன்.

எழுத்தறிவற்ற உனக்கு

பாதையின் பெயர் தெரியாது

'பாதை உனது' என்று மட்டுமே

தெரிந்திருந்தாய்.

என் நீண்ட பயணத்தில்

களைப்படைந்த வேளையில்

உன்னை நினைவு கொள்கின்றேன்.

நீ சிறு பொட்டாய் எனினும்

துலக்கமாய் ஒளிர்ந்து

கொண்டிருக்கின்றாய்.

பல நாட்கள் உன்னை

பாராதிருந்தால்

பட்சமில்லை என்பாய்.

சில சொற்கள் பேசுவேன்.

துன்பம் மறந்து போவாய்,

கோபம் தணிவாய் பின்

உன் ஆதங்கம் அனைத்தும்

அழுகையாய் வெளியேறும்.

என் செய்வேன் என்

அன்னையே,

இப்பார் திசையெங்கும்

பரந்து கிடக்கின்றது.

அன்பு கொள்ளும்

அனைவரிலும் உன்னையே

காண விழைகின்றேன்.

கலக்கமுற்று சில கணங்கள்

என்னை மறப்பேன்.

உன் நினைவில்

இன்பங்கள் எத்தனை?

துன்பங்க்ள் எத்தனை?

ஏழு வயதில் எடுத்த சுமையை

இறக்கி வைக்க இன்னும் நீ

விரும்பவில்லை- உன்

இதயம் புண்ணாகிய போது

உன் மூளையில் குருதி உறைந்தது.

தோள்கள் வலித்தபோது

உன் கால்கள் நசக்க

மறுத்தன.

யாரிடம் கூறமுடியும்

என்று சில வேளை விட்டு விடுவாய்

சிலவேளை பிடிவாதம்

செய்வாய்,

பேய், பிசாசு என்பாய்,

யாதுமில்லை, இஃது நோய் என்பேன்

அமைதி கொள்வாய்-

காலம் குறுகியது;

காத்திருக்கும் வேலைகளோ பல,

கடக்க வேண்டிய பாதைகளோ,

அநேகம்.

ஒவ்வொரு ஒழுங்கையையும்

கடக்கும் வேளையில் உன்னை நான்

நினைவு கொவேன்.

என்னையும், உன்னையும்

இணைக்கின்ற ஏதோவொன்று

இதயத்தில் ஒவ்வொரு கலத்தையும்

அதன் கூறுகளையும்

தொடுகின்றது;

என்னை மெய் சிலிர்த்து

உளம் உறைந்திடச்

செய்கின்றது.

காலமோ, கடமையோ

தூரமோ அதன் மென்மையை

கசக்கிட முடியாது.

மரணத் தறுவாயிலும்

எம் உறவு மாசுபடாதிருக்கவே

விரும்புகின்றேன்.

துன்பத்திலும்,

வெஞ்சத்திலும்,

அதை இழக்க விடமாட்டேன்.

உன் தியாகங்கள்,

உன் உழைப்புக்கள்,

உன் இழப்புக்கள்

காலம் நம்மை

மறைத்த போதும்- உன்னை

நினைவு கூரச் செய்யும்.

உன் நினைவு

உன் உழைப்பு

உன் சந்ததிகளில் வாழும்.

------------------------------------------------------------

ஓர் புற்று நோயாளியும் நானும்

பயணம்

நெடுந்தூரம்,

சோதனைகளால்

துன்பம் கதையாகும்

பயணம் நெடுந்தூரம்.

எனது ஆசனத்தின் முன்னால்

அவன் அமர்ந்துள்ளான்

நீலம் பாரித்த

விழியின் வெண்படலம்,

கதிர்த் தாக்கத்தால்

கருகிக் காய்ந்த அவன்

கன்னத்துத் தோல்

அவனை 'அந்த' சிறையின்

கைதியென அடையாளங் காட்டின.

நான் அவன் பின்னாசனத்தில்

அமர்ந்திருக்கின்றேன்.

அவ்வளவு அழகு என்பதற்கில்லை,

சுமார் தான்

என்றாலும் பரவாயில்லை,

ஏனெனில் துப்பாக்கி மனிதனின்

உணர்வுகளை தூண்டக் கூடியளவுக்கு

அது இருந்திருக்க வேண்டும்.

துப்பாக்கி மனிதனே,

அவன் இருப்பின் இறுதிக்கோட்டை

எதிர்த்து நிற்பவன்.

நீயோ இருப்பின் இறுதிக்கோட்டுக்கு

உயிர்களை இழுத்துச் செல்பவன்.

அவன் கண்களின் கதையை

கதிர்வடுக்களின் கதையை

உன் காமக் கண்கள்

அறியமுடியாது.

நீ அவன் கையிலுள்ள

'கிசுகிசுப்' பையைத் துளாவி

அவனது கைதிக்கூண்டுக்குரிய

அடையாள அட்டையைப்

பார்வையிடுகின்றாய்.

அது கூறும் கதைகளை

உன் மரத்துப் பான

உணர்வுகளால்

உணர முடியாது நண்பனே

தன் இறுதிப் பயணத்தைத்

தொடங்குமுன்

தன்னை ஈன்றவர்களை,

தன்னிரு குழந்தைகளை,

பார்வையிடச் சென்று

அவன் மீண்டு வருகின்றான்

இந்தப் பாழும் நரகிலிருந்து

விடை பெற்றுக் கொள்ள.

உனது முரட்டுக் கரங்கள்

துப்பாக்கியின் பரிசத்தைத்தான் அறியும்,

உன் கண்கள்

உயிர்க் கண்களையே

குறிபார்த்துப் பழக்கப்பட்டன.

உன்னிடம்,

மனித நேயத்தையும்

அபிமானத்தையும்

எப்படி எதிர்பார்க்க முடியும்.

பயணிகளின் பயணப்பைகள்

உன் கைகளில் படாதபாடுபடும்,

சாப்பாட்டுப் பொதிகள் கூட

உன் கம்பிகளுக்கு

தப்புவதேயில்லை.

எனினும், எனது கைப்பைகள்

உன் புன்சிரிப்புடன்

தப்பித்துக் கொள்ளும்.

வெறும் உணர்வுகளுக்கு

அடிமையாகும் வீரனே,

எப்போது நீ மனித நேயத்துக்கு

அடிமையாகப் போகிறாய்?

அது எப்போது?

------------------------------------------------------------

இருப்பின் மறுப்பு

குற்றம்; விபச்சாரம்,

தண்டனை; மரணம்.

உனது விதி என்றோ எழுதப்பட்டு விட்டது.

எனே, உன்னை அதற்காகவே

தயார் செய்தனர்.

அவர்கள் உனக்குக் கூறினர்

"நீ ஆணுக்காகவே படைக்கப்பட்டாய்".

அதை அவர்கள் கற்பித்தபோது

அது குற்றமாகவே படவில்லை.

அதையே நீ செயற்படுத்த முனைந்தபோது

நீ குற்றவாளியானாய்.

அன்று நீ பாதுகாக்கப்படவேண்டிய

அடைக்கலப்பொருள்,

இன்பமூட்டும் போதைப் பொருள்.

இன்று விபச்சாரி.

குற்றவாளிக் கூண்டில் நீ

தனியளாய் நின்றாய்.

வாழ்க்கை உனக்கு நிச்சயமானபோது

உன்னுடன் பலர் இருந்தனர்.

வாழ்க்கை உனக்கு மறுக்கப்பட்டபோது

நீ தனியளாய் நின்றாய்.

உன் துணைவன் கூட

உன்னைப் பார்க்க

அனுமதிக்கப்படவில்லை.

உன் குழந்தைகளும்

உன் கணவனும் உன்னிடமிருந்து

பிடுங்கி வீசப்பட்டனர்.

ஏனெனில், நீ குற்றவாளி,

விபச்சாரி,

துப்பாக்கிக் குண்டுகளுக்கு

மாத்திரமே உன்னிடத்தில் உறவுண்டு.

அன்று அவர்கள் கருத்துக்களை விளங்க

முடியாதவளாயிருந்தாய்.

இன்று உன் மரணத்தைத் தடுக்க

முடியாதவளானாய்,

சென்று நீ சமாதுயடைந்தாய்.

உன்னைக் கொன்று

அவர்கள் "சாந்தி" பெற்றனர்.

உன் குழந்தைகள்

உன் கணவன்,

நிர்க்கதியாகினர்.

அவர்களின் அழுகையை

உன் மரணத்தின் அலறலை

இவ்வையகம் அறியட்டும்.

சென்று நீ சமாதியடை,

காலத்தின் மன்றத்தில்

உன் வழக்கு

தீர்ப்பளிக்கப்படட்டும்.

------------------------------------------------------------

சாதாரண மனிதன்

வெறுமையடைந்து கிடந்தது நெஞ்ச்ம்

பொருளற்றது போன்றானது இருப்பு,

அந்தி மயங்கும் மாலைப் பொழுதில்

அலைகடல் அருகில்

தெறிக்கும் நீர்த்துளிகளால்

சிறிது சிலிர்ப்படைகின்றது நெஞ்சம்.

நினைவுகளை மீட்கவும் வேண்டாமல்,

நினைக்கவும் வேண்டாமல்,

வெறுமையடைந்து கிடந்தது நெஞ்ச்ம்

பொருளற்றது போன்றானது இருப்பு.

நங்கூரமிடப்பட்ட கப்பல்கள்

நாட்கணக்காக

துறைமுகத்தில் தேங்கியுள்ளன.

பொருட்கள் காலாவதியாகிப்

போகும் நிலை.

காலம் யாரையும் கேட்காது

கடந்து செல்கின்றது,

இறக்கப்படாத இந்த சுமைகளுடன்

இந்தக் கப்பல்கள் மீளவும் கூடும்,

அல்லாது ஓர் நாள்

கண்களின் பார்வை வீச்சுக்கு அப்பால்

கடலில் வெகுதூரம் செல்லவும் கூடும்,

அத்திலாந்தின் அபாயச் சுழிக்குள்

அகப்பட்டு இனம் தெரியாமல்

மறையவும் கூடும்.

தண்ணீர்ப் பரப்பில்

நீர்த்துளிகள்

முத்துக்களை ஆக்குவதாக

இந்தக் கவிஞன்

கற்பனை கூட செய்து கொள்வான்.

சொந்தப் பெயரில்,

எழுதமுடியா அவன் தன் நிலையை

நொந்தும் கொள்வான்.

இதயத்திலுள்ள

எல்லா வாயில்களையும்

இறுகக் கட்டி,

வெறுமைக் கண்ணால்

உற்றுப் பார்த்து

புன்னகை கூட செய்து கொள்வான்.

எந்த நினைப்பு

இந்தக் களிப்பை

கொண்டு வருதல் கூடும்?

அவன் ஓவியனுமல்ல.

பேனா முனையைப் பிடித்துக்

கிறுக்கும் பித்தனுமல்ல.

காகிதம் கொண்டு

கட்டளை போடும் சட்டாம்பிள்ளையுமல்ல.

அவன்

சாதாரண மனிதன்

சாதாரண மனிதன்.

சின்னஞ்சிறிய

மெல்லிய நினைவும்

இன்பக் களிப்பைத் தருதல் கூடும்.

அன்றேல்

எண்ணிலடங்கா,

துன்ப நிலையைத் தருதலும் கூடும்.

அவன் சாதாரண மனிதன்.

ஏக்கம், தவிப்பு, களிப்பு,

நினைவு, அனைத்தும்

அவனில் அடங்கியுள்ள

சாதாரண மனிதன்.

------------------------------------------------------------

போர் இரவுகளின் சாட்சிகள்

பேரிடி,

எங்கும் வெளிச்சம் கணநேரம்,

கடும் மழையோ என விழிக்க,

உறக்கம் கலைகின்றது.

காரிருள் எங்கும் கவிந்துள்ளது.

கரும்பனையின் நிழல்கூட

பூமியில் பதிவாகவில்லை.

இருளைக் கடந்து

பனை ஓலைச் சரசப்பு.

எங்கிருந்தோ,

தனித்து விட்ட நாயின் ஊளை ஒலி.

மீண்டும் பேரிடி,

மின்னல்,

கனவா?

கள்வனா?

இல்லை... இல்லை...

இடி, இடி, பேரிடி,

மழை இல்லை மின்னல் மட்டும் தெரிகின்றது.

துப்பாக்கி வெடிச்சத்தம்

தொடர்ந்து கேட்கின்றது.

எல்லோரும்

எழுந்து திண்ணையில் உட்கார்ந்தோம்.

என்ன இது என்று கேட்க

வார்த்தை வரவில்லை.

வாயடைத்துப் போயிற்று.

வார்த்தை வழி மறந்தது?

வரவில்லை வெளியில்.

ஓய்கிறது ஓசை.

நீள்கிறது இரவு.

நாளை பார்க்கலாம்.

காலை எழுந்தால்

கலக்கத்துடன் மனித முகங்கள்

தெருவில் திரிந்தன.

எல்லாம் முடிந்தது

இனி யாது நடக்கும்?

ஒரே வினா எஞ்சி நின்றது,

அந்த

இரவின் தொடக்கம்

போர் யுகத்தின் ஆரம்பம்

இரும்புப் பறவைகள் வானில் பறக்க

பதுங்கு குழிகளில்

மனிதர்கள் தவிக்க,

தொடர்கிறது அந்த இரவு.

மானிடத்தின் மரணத்திற்கு

இரத்தம் தோய்ந்த இந்த இரவுகள் சாட்சி.

தெருச் சடலங்கள்

கற்பிழந்த பெண்கள்

கருகிக் காய்ந்த குழந்தைச் சடலங்கள்

இடிந்த கட்டிடங்கள்.

கழி வெடித்து

காய்ந்து கிடக்கும் வயல்வெளிகள்

புத்தகச் சாம்பல்கள்.

வாயு நிரம்பும்

வயிற்று மனிதர்கள்.

இன்னும், இன்னும் எத்தனை

இந்தப் பட்டியல்

இன்னும் நீளும்.

இரவின் சாட்சிகள்.

------------------------------------------------------------

எனக்கு ஓர் இடம் வேண்டும்

வீசும் சூறாவளியின்

சுழல் மையம் எங்கு நிலைகொண்டுள்ளதோ

நானறியேன்.

எக்கட்டத்தை

எம்மாளிகையை

எந்நேரத்தில்- அது

தகர்க்குமோ- அதுவும்

நானறியேன்.

கற்பனைக்கு எட்டாத சூன்யவெளியில்

இந்தச் சூறாவளியில் கைகள்

அகல விரிக்க முடியா வெளியில்

எனக்கு ஓர் இடம் வேண்டும்.

அங்கு அமைதியும் சாந்தியும்

நிலை கொள்ளவும் வேண்டும்.

மானிடரின் பேதங்களுக்கு

வர்க்கமும், நிறமும், இனமும்

மொழியும், பாலும் உண்டு.

எனக்குத் தெரிகிறது

மனிதத்துவம் இவற்றுக்கெலாம்

அப்பாயே லேயுள்ளது.

மனிதத்துவம் மட்டுமே வாழும்

அவ் வெளியில் நானும் நிலைக்க வேண்டும்;

பேதங்கள் அற்ற, தேவைகள் அற்ற

அவ்வுலகில் நானும் சஞ்சாரம் செய்யவேண்டும்.

அண்டவெளிக்கப்பால்,

அனைத்தும் அசைவனபோல்,

நானும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

யாரும், யாரதும் இயக்கத்தில்,

இடையூறில்லாது

யாரும் யாரிலும் தங்கியிராது

நியமக் கிரமமாய்,

நிலைத்த அமைதியாய்,

இன்னும் அமைதியாய்

நானும் இயங்க வேண்டும்.

தசைகள், குருதி, என்பு

நரம்பு, மனவெழுச்சிகள் கொண்ட

இவ்வுடல் நம்மை விட்டு

அகன்ற நிலையில்

பேதங்களற்ற நித்தியவெளியில்

நானும் நிலைக்க வேண்டும்.

------------------------------------------------------------

திரைகளின் பின்னால்

இரவின் மடியில்

இருளின் இராச்சியம்.

உயிருள்ள ஜீவன் நான்.

ஓரமாய் உட்கார்ந்து

ஒன்றுமே அற்று

சும்மா இருக்க முடியாது.

சென்று மறையும் இக்கணங்களில்,

கனன்று உழலும் நெஞ்சக் குமுறல்கள்.

நெஞ்சக் கணப்பை

மேலும் அதிகமாக்கும்.

திரைகளின் மூடல்.

ஒன்றன் மேல் ஒன்றாய்

எத்தனை எத்தனை? அதற்கு மேலும்.

இதுவும் ஒன்றா?

எல்லாவற்றையும் தன்னுள்

மறைக்கும் இந்தத் திரைக்குள்,

எங்ஙனம் இருப்போம்?

இறந்தவர் அல்லர் நாம்

இதயம் துடிக்கும் ஏழைப் பெண்கள்

மண்ணின் குழந்தைகள்

மானிடப் பெண்கள் நாம்

இனியும் சகியோம்

இருளின் ஆட்சியை

எதற்கும் அஞ்சோம் துன்பம் ஏற்றிடோம்

துயர்மிகக் கொள்ளோம்

வென்று இவ்வுலகில் நிலைத்திட வந்தோம்

இன்று பிறந்தோம்

இன்று பிறந்தோம்

வென்று வாழ்ந்திட

இன்று பிறந்தோம்.

------------------------------------------------------------

பாவம் மானுடன்

இப்போ தெல்லாம்

புவிக்கிரகத்தில்

பேனா, பேப்பர்

குத்தும் முத்திரை

தொலைபேசி தொடர்பு கொள்ள

நகர்வதற்கு வாகனம்,

இவை கொண்ட

மானுடச் சடம் ஒன்று உருவாகி வருகின்றது.

கோடானு கோடி ஆண்டுகளாக

இப்புவியை ஆண்ட

எல்லையற்ற திறன்மிக்க

ஆற்றல் மிகு, மானிட உயிரி அழிந்து வருகின்றது.

பாவம் மானுடன்,

அவனது இறப்பு மீட்க முடியாததாகி விடும் போலுள்ளது.

நீண்ட நாட்களின் முன்பு

அவனுக்கென்றொரு

சிறப்புமிக்க, மெனுணர்வுகள் கொண்ட

உயிரியல் பரிமாணம் ஒன்று இருந்தது.

ஆமாம், பாவம் மானுடன்.

அவனது உயிரியல் இறப்பு தவிர்க்க முடியாததாகி விட்டது.

ஈடு செய்ய முடியா

அவன் இறப்பு ஏறக்குறைய

நிச்சயமாகி விட்டது.

பாவம் மானுடன்

ஒன்றும் இல்லாது,

யாரும் கொல்லாது

எதுவும் யாரிடமும் சொல்லாது

இறுதியில் தானே இறந்து போவான்.

பாவம் மானுடன்.

தன்னிலை இழந்து இறந்துதான் போவான்.

பாவம் மானுடன்

------------------------------------------------------------

இன்பம் நிலைக்க இளமை வேண்டும்

எங்கெல்லாம் தேடி

இரண்டு சொல் எடுத்து

இயற்றிய

கவியிலும் இனிய

இவ்விளமை என்றும் வேண்டும்.

வான் வாழ்க்கை வேண்டி

சிறை வாழ்க்கை தாண்ட

மனம் ஏங்கும்

மனத்துயர் நீங்கி

மங்களம் பரவிட

மனவிளமை என்றும்

நிலைத்திட வேண்டும்.

கண்களை இறுக மூடிக்

கற்பனை செய்வதிலும்

மழை நீர் கண்டு

இளநகை புரியும்

பூந்தளிர்களின்

எளிமையைக் கண்டு மகிழ்வதிலும்,

புத்தகம் தன்னில்

புதிதாய் ஏதும் கண்டு கொள்வதிலும்

பண்ணோடு பாடல்

பலர் ருசிக்க

பண்டங்கள் செய்வதிலும்

எங்கும் எதிலும் சுகம் காண்பேன்.

இவ்வின்பம் நிலைத்து

இளமையைத் தருக

புரவி கண்டு

இன்பம் பரவி,

அன்பு நிலைத்திட

இவ்விளமை நிலைக்குக.

களை களைத்து

இன்புற்றிருக்க

இவ்விளமை வேண்டும்

இவ்விளமையைக் கொல்லும்

துன்பம் என்னை நெருங்கிடலாகாது.

தீராத நோய் என்றும்,

என்னைத் தீர்க்க முடியாது

செய்வேன்.

இவ்வுலகில் தீயனவெல்லாம்

செயலிழக்கச் செய்வேன்.

தோல்வி எனைத் தோற்கடிக்க

முடியாது.

தேவைகள் எது வரினும்

தேறி நான் செல்வேன்

இவ்வாழ்வை வெல்வேன்

இனிப் பொழுதும்

வீணே கழித்திடலாகாது

சுழல் போன்றியங்கி

நிலைப்பேன்; சிந்தையில்

துயர் நீங்கி சுகம் காண்பேன்.

------------------------------------------------------------

து(ர்)ப்பாக்கி(ய) மனிதன்

வேசங்கள் பல உலகில்,

விவஸ்தை இல்லாது

இப்படியும் ஓர் வேசம்.

கையி துப்பாக்கி.

முழங்காலளவு சப்பாத்து

சிவப்பு உடை,

இறகுகள் வேய்ந்த தொப்பி

இடுப்பளவு கம்பிக்கூடு,

நடுவில் நிற்கும் இவன்

சிலையே யில்லை.

மனிதன் தான்,

உயிருள்ள மனிதன்.

ஒவ்வொரு முறையும்,

புறக் கோட்டை தாண்டிச் செல்லும் பஸ்,

உன்னைத் தாண்டிச் செல்லும் போது

ஒரு வேளை வியப்பு வரும்.

மறுவேளை சிரிப்பு வரும்,

அடுத்தகணம் விசனம் வரும்.

மரபுகளைப் பேணும்

மனித சடங்களே,

மனித உணர்வுகளைப் பேண

உங்களுக்கு மனமேயில்லையா?

ஏனைய்யா இந்தக் கொடுமை

காவலா புரிகிறான்

இந்தத் துப்பாக்கி மனிதன்?

காட்சிப் பொருளாய்,

கல்லாய்ச் சமைகிறான்

கால்கள் உழைய- உங்கள்

கௌரவம் காக்கிறான்,

நாலடிக் கூண்டுக்குள்

அவன் காலடிகளை

அடக்கி

கற்சிலையாக்கி

சீர்காக்கும் உங்கள் மரபை

சீர்தூக்கிப் பார்க்கும்

வேளை எப்போது வரும்?

------------------------------------------------------------

உழைப்பு

அழுத்து

அழுத்து

வேகமாக

இன்னும் வேகமாக

உணர்வுகள் பீறிட்டு எழும்வரை

தூங்கிக் கிடக்கும் இவை

இருந்தென்ன, இல்லாதென்ன

எவ்வாறெனினும் அதனை

மேலெழும்பச் செய்,

சொல்லால், செயலால்,

எதனாலென்றாலும்

அழுத்து

மிக வேகமாக

உரம் கொண்டு

அடித்துச் செல்லும்

ஆறு போன்று

உணர்வுகள் உயிர்பெற்று

ஓடும் வரை

அழுத்து மேலும்,

சிந்தனையற்று

சிரம் பணிந்து

வாழ்ந்து பழகி விட்டதால்

அழுத்துவதொன்றும்

அவ்வளவு இலகுவாய் இராது,

நாட்கள், மாதங்கள்,

வருடங்கள் சென்றாலும்

பாதகமில்லை

எப்போதெனினும் இதனை நாம்

செய்தே ஆக வேண்டும்.

இல்லாவிட்டால்

இருப்புடன் இறந்த

பிணங்களாகி விடுவோம்.

தூங்கிக் கிடக்கும்

துடிப்புக்களை எவ்வாறெனினும்

துயில் எழச் செய்ய வேண்டும்.

துன்பம் சேர்க்கும்

இந்தத் துயிலில் இனித்தோய வேண்டாம்.

மௌனமாக,

மனதில் குமுறி

மாண்டு போகவும் வேண்டாம்.

இந்தத் துயிலை எவ்வாறெனினும்

இல்லாதொழிக்க வேண்டும்.

அழுத்து

மிக வேகமாய்,

சீறிப்பாயும் சூறைப்புயலின் வேகங்கொண்டு

அழுத்து இன்னும் வேகமாய்,

இந்தத் தூக்கம் மாளும்வரை

இன்பக் களிப்பு உயிர்பெறும்வரை.

-------------------------------------------------------------